சாதி, மதம் பார்த்து வாக்களிக்காதீர். சாதித்தவரைப் பார்த்து வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் தாதகாப்பட்டியில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழகத்தில் ஏழ்மை தலைவிரித்தாடுகிறது. குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகம்குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாகிவிட்டது. இதற்காககுரங்குகள் கோபித்து கொள்ளக்கூடாது. பூமாலை மீதுள்ள கரிசனத்தில் சொல்கிறேன்.
ஆண்டுகொண்டிருக்கும் அரசு இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், என் சொத்து மதிப்புரூ.200 கோடியைத் தாண்டியிருக்கும். என்னை தொழில் செய்யவிடாமல் தடுத்து, ஆளும் கட்சியினர் இழப்பை ஏற்படுத்தினர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் அதில், 33 சதவீதம் பேர் குற்றவாளிகளாக உள்ளனர். கட்டப்பட்டு வரும் பாலங்களை பார்த்தேன். பாலம் என்று வரும்போது, இவர்கள் கண்களில் லாபம் என்று தெரிகிறது.
நான் வருமான வரி கட்டாமல் இருந்திருந்தால் எனது சொத்து மதிப்பு ரூ.300 கோடியைத் தாண்டியிருக்கும். நேர்மையாக இருப்பது கஷ்டமல்ல; பொய் பேசுவதுதான் சிரமம். மக்கள் பணத்தை களவாடாமல் இருந்தாலே நாங்கள் போட்ட திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
‘சேவையை செய்திருக்கிறேன் வாய்ப்பு கொடுங்கள்’ என்று என்னிடம் வந்தவர்கள்தான் இப்போது எங்கள் வேட்பாளர்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்காதீர். சாதிப்பவனை பார்த்து வாக்களியுங்கள். குடிக்க தண்ணீர் இல்லை என்று கேட்டால் வாஷிங்மெஷின் தருகிறோம் என்கிறார்கள்.
‘மகாநதி’ பட வசனம்
ஆட்சியில் இருக்கும் விஷப் பாம்பின் தலை போய்விட்டது, இப்போது வால் ஆடிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பாம்புக்கு தலை இருக்கிறது, அது இன்னும் ஆபத்து.
‘மூன்றாவது அணி இதுவரை வென்றது இல்லை’ என்கிறார்கள். கணக்கு கேட்டு வெளியே வந்த எம்ஜிஆரே மூன்றாவது அணிதான். எனக்கான தொகுதியை இந்தியாவுக்கே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.