Regional02

திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் : 4-வது நாளில் 57 பேர் மனு தாக்கல் :

செய்திப்பிரிவு

வேட்புமனு தாக்கலின் 4-ம் நாளான திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று 57 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தாராபுரம் (தனி) தொகுதியில் 4, காங்கயத்தில் 23, அவிநாசியில் ஒருவர், திருப்பூர் வடக்கு 8, திருப்பூர் தெற்கு 5, பல்லடம் 5, உடுமலையில் 3 பேரும் என ஒரே நாளில் 49 பேர் மனு தாக்கல் செய்தனர். மடத்துக்குளம் தொகுதியில் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. திருப்பூர் வடக்கு தொகுதியில் தற்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், திமுகவின் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் ரவி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் சு.சிவபாலன் ஆகியோர், திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல திருப்பூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷா ரவி, நாம் தமிழர் கட்சியின் சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமாரிடமும், பல்லடம் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஜோதிமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் மனு தாக்கல் செய்தனர். தாராபுரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் கயல்விழி செல்வராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் பவண்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயம் தொகுதியில் இதுவரை 32 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம்

நேற்று, உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ் பாபு, அமமுக வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார், அமமுக வேட்பாளர் எஸ்.கலைச்செல்வன், நாம் தமிழர் வேட்பாளர் லாவண்யா மற்றும் ஒரு சுயேச்சை என நான்கு நபர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 9 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அபராதம்

SCROLL FOR NEXT