Regional02

மருத்துவர்களின் முகநூல் பக்கத்தை : முடக்கி பணம் பறிக்கப்பட்டதாக புகார் : திருப்பூர் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

திருப்பூரில் மருத்துவர்களின் முகநூல் பக்கத்தை முடக்கி, பணம் பறிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: திருப்பூரைச் சேர்ந்த மூத்த மருத்துவர், மற்றொரு இளம் மருத்துவர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் என பலரது முகநூல் பக்கங்களை முடக்கி, மெசஞ்சர் மூலம் குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.

அதில், தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, அவசர மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி, அந்தப் பணத்தை அடுத்த நாளே திருப்பித் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ‘கூகுள் பே’ கொண்ட செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சக மருத்துவருக்கு உதவும் நோக்கில் அந்த எண்ணுக்கு தங்களால் இயன்ற அளவுக்குபணம் அனுப்பியுள்ளனர். நெருங்கிய நண்பர்களுக்கும் இதுபோன்ற தகவல் வந்ததால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர். உதவி தேவைப்பட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட மருத்துவரை அழைத்து தகவலை தெரிவித்தபோதுதான், அவரது முகநூல் பக்கம் முடக்கப்பட்டிருப்பதை அறிந்தார். பலரும் இந்த தகவலை நம்பி, கூகுள்பேவில் பணத்தை அனுப்பி ஏமாந்த விவரமும் தெரியவந்தது. கூகுள்பேவில் பணம் அனுப்பிய செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அழைப்பை யாரும் ஏற்கவில்லை.

இந்த மோசடி குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீஸாரிடம், பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் கே.சுரேஷ்குமார் கூறும்போது ‘‘இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தற்போதைய புகார் தொடர்பாக விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT