தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையம் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க, அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, உதவி இயக்குநர் (நில அளவை) சசிகுமார், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.