கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வாக்குச் சாவடி மையங்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. சேலம் கோட்டை மாநகராட்சி சமுதாய கூடத்தில் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவைகளை சரிபார்க்கும் அலுவலர்.படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

வாக்குச்சாவடி மையங்களுக்கு - கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைப்பு :

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி சேலம் கோட்டை மாநகராட்சி பல்நோக்கு கூடத்தில் நடந்தது.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி சேலம் கோட்டை மாநகராட்சி பல்நோக்கு கூடத்தில் நடைபெற்றது.

இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், உபகரணங்களை விரைந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 4,280 வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய 4,494 தெர்மல் ஸ்கேனர் கருவிகள், 29,532 கிருமி நாசினி பாட்டில்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு 47,080 முக பாதுகாப்பு கவசங்கள் மற்றும் 2,82,480 முகக்கவசங்கள், உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

மேலும், வாக்காளர்களின் பயன்பாட்டுக்காக 1,28,400 முகக் கவசங்கள், ஒரு முறை பயன்படுத்தும் 1,41,240 கையுறைகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT