தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள்உள்ளிட்ட பெரிய கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளிலும் அந்தந்த பகுதி சுகாதார அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் சுமார் 300 கடைகளில் நேற்று ஒரே நாளில் ஆய்வுநடத்தினர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளைசுத்தம் செய்ய சானிடைசர், கைகழுவும் திரவம் போன்றவை வைக்கவேண்டும் என, அதிகாரிகள்அறிவுறுத்தினர். மேலும், ஜவுளிக்கடைகளில் ஆடைகளை போட்டுப் பார்க்கும் டிரையல் ரூம்களை பயன்படுத்தக்கூடாது. அவற்றை முழுமையாக மூடி வைக்க வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இந்த மாதத்தில் மட்டும்18 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டும் என, மாநகராட்சி அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.