நாடு முழுவதும் 2-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னை டிவிஎஸ் காலனியில் உள்ள பொது சுகாதார மையத்தில் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள். படம்: கே. பிச்சுமணி 
FrontPg

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் : மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நட மாட்டத்தை தடுத்து கண்காணிக்க வேண் டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் களுக்கு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக் கத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங் கியது. இதையடுத்து நாடுமுழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல் வேறு நடவடிக்கைகளால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால், ஊர டங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகா ராஷ்டிராவின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு முறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்..

கூட்டத்தில் வருவாய்த் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரி, பொதுத்துறை, சுகா தாரத் துறை செயலர்கள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள் ளிட்டோர் பங்கேற்றனர். தற்போதுள்ள கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை செயலர் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கை:

அண்மைக்காலமாக உலகளவில் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக் கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகா ராஷ்டிராவில் தினசரி 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், கேரளாவில் 2 ஆயிரம், பஞ்சாபில் 1,400, கர்நாடகாவில் 900, குஜராத்தில் 800, டெல்லியில் 400 என்ற அளவில் தொற்று பாதிப்பு பதிவாகிறது.

தமிழகத்தில் அரசு எடுத்த நட வடிக்கைகளால் தொற்று விகிதம் குறைந்து வந்தது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 500-க்கு கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 10 நாட்களாக, படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தினமும் 65 ஆயிரம் ஆர்டிபிசிஆர் சோதனைகளில் உறுதி செய்யப்படும் தொற்று எண்ணிக் கையும் உயர்ந்து மீண்டும் 800-ஐ தாண்டியுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு தீவிரமாக கண்காணிக்க மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது.

பெரும்பாலான இடங்களில் முகக் கவசம் இன்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடப்பது, பொது இடங்களில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது ஆகியவையே தொற்று அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றவர்கள் அதை கடைபிடிக்காததால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவு வதும், வங்கிகள், பள்ளிகள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததால் கூட்டாக சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதும் கண்டறியப் பட்டது. இதையடுத்து, தலைமைச் செய லர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

l பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதையும், அரசின் வழிகாட்டு தல்களை நிறுவனங்கள் பின்பற்று வதையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

l அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் தெளிவான நெறிமுறைகள்படி கைகழுவும் திரவம் வைத்திருப்பதோடு, வெப்பநிலை பரிசோதனையை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, நிறுவனங்கள், வங்கிகள், அரசு, தனியார் அலு வலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் வழிகாட்டுமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்.

l நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்து தல், பொதுக் குழாய், கழிப்பிடம் இருக்கும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் போன்றவற்றை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

l கரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண் டறிந்து தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரி எடுக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத் தில் தாமதமின்றி உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

l கூட்டாக நோய்த் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து, உறுதி செய்த பின் தகுந்த நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

l காய்ச்சல் முகாம்களை அதிகரித்து, நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

l தகுதி வாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

l வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும்.

l மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், கலாசார, வழிபாடு மற்றும் இதர கூட்டங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளிக்க வேண்டும். இதை சம்பந்தப் பட்ட துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.

l மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் முக்கிய பங்காக கரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையான முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட் சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

l பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி, பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுமா?

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும், கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் போடப்படுகிறது. இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணையாக சுமார் 16 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ள சுமார் 7 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வயது வரம்பின்றி அனைவருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதன்மூலம் கரோனா தொற்று பாதிப்பு குறையும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் என்று இல்லாமல் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கும்படி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்’’ என்றனர்.

நடக்க முடியாமல் அவதிப்படும் முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே வந்து தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

SCROLL FOR NEXT