கோவை: கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ், சிங்காநல்லூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் சி.ராம்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, கிரைண்டர், மோட்டார் இயந்திரம், ஸ்பேனர்கள் ஆகியவற்றுடன், தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார்.
இதுகுறித்து கே.மணிராஜ் கூறும்போது, ‘‘மூலப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தொழில் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொழில் துறையினரின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைப்பதற்காக சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றார்.