கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனி. இவரது மனைவி விருதம்மாள் (49). இவர்கள், திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். அப்போது, விருதம்மாள் தனது உறவினர் செல்வியுடன் அடிக்கடி பேசி வந்தார். அவர் மூலமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஏ.ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜி(55) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இதனையறிந்த பழனி கண்டித்து, தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள சென்றாயன் மலைக் கோயில் அருகே சித்த வைத்தியரை பார்க்க பழனியை, விருதம்மாள் அழைத்து வந்தார். அங்குள்ள மாவத்தூர் பிரிவு சாலை அருகே ராஜியும், விருதம்மாளும் சேர்ந்து பழனியை கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்லாவி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராஜி, விருதம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். விருதம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.