100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, கிருஷ்ணகிரி அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குருபரப்பள்ளியில் தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிறுவனத்தில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் விவிபேட் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்கும் பகுதிக்குள் நுழையும் போது தலைமை வாக்குச்சாவடி அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரத்தை பதிவுக்கு தயார் நிலையில் வைப்பார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தவுடன், வேட்பாளரின் பெயர், சின்னம், வரிசை எண் உள்ளடக்கிய ஒப்புகைச் சீட்டு ரசீதை 7 நொடிகள் வரை பார்க்கலாம். சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே, தொழிலாளர்கள் அன்றைய தினத்தில் 100 சதவீதம் வாக்களிக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரங்களில் செயல்பாடுகள் குறித்தும், மாதிரி வாக்குப்பதிவு நடத்தி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்துஉறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.