மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ள மண். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
Regional01

மண் கொட்டப்படுவதால் பாழாகி வரும் மதுரை மருத்துவக்கல்லூரி மைதானம் : மாணவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் விளையாடுவதற்காக கல்லூரி வளாகத்தில் 10 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது

இதில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்காக மைதானத்தின் 5 ஏக்கர் வழங்கப்பட்டது. எஞ்சிய மைதானத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் விளையாடி வந்தனர். தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகள்கூட நடந்தன.

இந்நிலையில், அரசு ராஜாஜி மருத் துவமனையில் ஜப்பானின் ஜைக்கா நிதி உதவியுடன் ரூ.250 கோடி மதிப்பில் கட்டுமானப் பணி நடக்கிறது. இதற்காக சேகரிக்கப்படும் மண், எஞ்சிய 5 ஏக்கர் மைதானத்தில் கொட்டப்படுகிறது. அதனால், மாணவர்கள் விளையாட முடியவில்லை. இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘கட்டுமானப்பணி அரசு ராஜாஜி மருத்து வமனையில் நடக்கிறது. அதற்காக ஒப்பந்ததாரர் கொண்டுவரும் மண்ணை அவர்கள் அங்குதான் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக மருத்துவக்கல்லூரி மைதானத்தில் வந்து மண்ணைக் கொட்டுவது நியாயமா? அள்ளிக் கொண்டு போக எளிதாக இருக்கிறது என்பதற்காக மைதானத்தைப் பாழாக்கிவிட்டனர்.

பேராசிரியர்களும், மாணவர்களும் டீன் சங்குமணியிடம் மண்ணை அப்புறப்படுத்த வலியுறுத்தினர். ஆனால், அவர் மருத்து வமனைக் கட்டிடம் கட்டி முடிந்த பிறகு விளையாடலாம் என்று சொல்லிவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்களின் மதிப்பெண்ணில் கைவைப்பார்கள் என்று அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்க்க முடியாமல் தவிக்கின்றனர் என்றனர்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, மண்ணை வேறு இடத்தில் கொட்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT