Regional01

ஊதிய உயர்வு கோரி - சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் :

செய்திப்பிரிவு

சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேலம்- சென்னையை இணைக்கும் சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி, தலைவாசல் அடுத்த நத்தக்கரை, கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களிடம் தனியார் நிறுவனம் கட்டணம் வசூலித்து வருகிறது.

கட்டண வசூலிப்பு மற்றும் சுங்கச்சாவடி பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் 50 முதல் 80 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுங்கச் சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகம் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுதொடர்பாக சுங்கச் சாவடி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:

சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அப்போது, கரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால், ஊதிய உயர்வுக்கான நடவடிக்கைகள் தடைபட்டன. வேலைநிறுத்தத்தால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களைக் கொண்டும், தானியங்கி (பாஸ்டேக்) முறையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுங்கச் சாவடி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை 4 வழிச்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. எனினும், ஊழியர்கள் கடந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் மற்றும் நாமக்கல்- கரூர் சாலையில் உள்ள ஒரு சுங்கச்சாவடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி ஆகியவற்றிலும் நேற்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல்லில் போராட்டம்

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி அருகே கீரம்பூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அதில் 29 ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் தங்களுக்கு ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே ஊழியர்கள் போராட்டத்தால் சுங்கச்சாவடி வழியாக கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT