சேலம் வனப்பகுதியில் அடுப்புக் கரிக்காக காடுகளில் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான மலைப்பகுதிகளிலும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாத நிலையே உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, கஞ்சமலை, பாலமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை உள்ளிட்ட கரடுகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. தற்போது, ஆங்காங்கே வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுகிறது.
சேலம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள ஜருகு மலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை காட்டுத் தீ ஏற்பட்டது. இதில், மரம், செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது. சிறிய மலைகளிலும், கரடு பகுதிகளிலும் பாதை வசதியில்லாததால், வாகனங்களில் சென்று தீயை அணைப்பது அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது.
எனவே, “கரடு அடிவாரங்களில் வசிக்கும் மக்களும், வன கிராம மக்களும் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க எளிதில் எரியக் கூடிய பொருட்களை வனம் சார்ந்த பகுதிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வனப்பகுதியில் இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயை காட்டிலும், அடுப்புக் கரி பயன்பாட்டுக்காக மலைப்பகுதிகளில் சிலர் வைத்து விட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.