Regional02

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கருத்து தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு :

செய்திப்பிரிவு

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய, கேரள அரசு நிறுவனமான தேசிய போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பணியமர்த்த ஒளிரும் ஈரோடு அமைப்பு முடிவு செய்துள்ளது. கேரளா, ஹரியானா மாநில நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த மையத்தினர் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளனர்.

இந்த பணிக்காக செலவாகும் ரூ. 20 லட்சத்தை ஒளிரும் ஈரோடு அமைப்பு வழங்கவுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், இந்த திட்ட அறிக்கை அளிக்கப்பட்டால், அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு நகரில் எங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது, அதை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, ரவுண்டானா அமைத்தல், ஒருவழிப்பாதையாக மாற்றுதல், வாகன நிறுத்தங்கள், மேம்பாலங்கள் அமைத்தல், புதிய சாலைகளின் தேவை போன்ற அம்சங்களை இந்த மையம் ஆய்வு செய்யவுள்ளது.

இந்த பளணியில் பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் வகையில், தங்கள் பகுதியில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை, அதற்கான தீர்வு குறித்து தனி நபர்கள், அமைப்புகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, 97869 55572 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ, olirumerodufoundation@gmail.com. info@olirumerodu.com என்ற இ-மெயில் முகவரியிலோ கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஈரோடு ரயில்நிலையம் எதிரே 133, எஸ்கேஎம்  வளாகம், காந்திஜி சாலை, ஈரோடு- 638001 என்ற முகவரியில் செயல்படும் ஒளிரும் ஈரோடு அலுவலகத்திற்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம் என அந்த அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT