கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, முகக் கவசத்தை ஆட்சியர் வழங்கினார். 
Regional01

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக - சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் தனியார் நகைக் கடை, தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்துள்ளனரா? என ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். முகக் கவசம் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது மீண்டும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகையான குழுக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படும்.

தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர், தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT