தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காவல் துறை சார்பில் 158 நடமாடும் ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் உரிய அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 6 தொகுதிகளுக்கும் நடமாடும் காவல் துறை ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விளாத்திகுளம் தொகுதிக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள் பானு தலைமையில் 29 நடமாடும் ரோந்து குழுக்கள், தூத்துக்குடி தொகுதிக்கு தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 26, திருச்செந்தூர் தொகுதிக்கு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா தலைமையில் 25, வைகுண்டம் தொகுதிக்கு வைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா தலைமையில் 21, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் தலைமையில் 29, கோவில்பட்டி தொகுதிக்கு கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகக்குமாரி தலைமையில் 28 நடமாடும் ரோந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. எஸ்பி பேசும்போது, ‘‘வாக்குப்பதிவை முன்னிட்டு 04.04.2021 முதல் 07.04.2021 வரை சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வட்டாட்சியர் அலுலகங்களில் இருந்து பெற்றதிலிருந்து, அவற்றை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையத்தில் ஒப்படைத்து, வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணும் இடத்தில் ஒப்படைக்கும் வரை காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சிறப்பு காவல்துறையினர் தங்கள் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.