அதிமுக தேர்தல் அறிக்கையில் நிறைய திட்டங்கள் வரவுள்ளன என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன், கெங்கவல்லி வேட்பாளர் நல்லதம்பி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
ஆத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அதிமுக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டது. வசிஷ்ட நதியில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த சுமார் ரு.10 கோடி செலவில் கைக்கான் வளவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் நகர மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு சிமென்ட் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் முடிவடைய உள்ளது. ஆத்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆத்தூரில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.
இங்குள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் நிரப்பிட நீரேற்று திட்டம் செயல்படுத்தப்படும். கெங்கவல்லி தொகுதியில் அதிகமான தடுப்பணைகள் அதிகமான பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆத்தூர் அடுத்த செல்லியம்பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டித் தரப்படும். ஆத்தூர் மஞ்சினி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டித் தரப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் நிறைய திட்டங்கள் வரவுள்ளன.
சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு எப்போதுமே பாதுகாப்பாக இருக்கிறது. 1999-ம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. இப்போது நாங்கள் கூட்டணி வைத்தால், அது மதச்சார்பா? அவரவர் மதம் அவரவர்களுக்கு புனிதமானது.
பிற மதத்தினரை புண்படுத்தும் செயல்களை அதிமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
திமுக தலைவர் ஸ்டாலின் பொய்களை பேசியே கட்சியை நடத்தி வருகிறார். பொய் சொல்பவர்களுக்கு உலக அளவில் நோபல் பரிசு கொடுத்தால், அதனைப் பெறுவதற்கு ஸ்டாலின் பொருத்தமானவர்.
திமுகவில் 20 வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளன. நான் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்த பொறுப்புக்கு வந்தேன். ஸ்டாலின் உழைக்காமல் கட்சியில் பதவிக்கு வந்து இருக்கிறார். உழைக்காமல் வந்தவர் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
கருணாநிதியின் மகன் என்ற அடையாளம் இன்றி ஸ்டாலின் மக்களை சந்திக்கட்டும். மக்கள்தான் நீதிபதிகள் அவர்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.