நீண்ட காலமாக அதிமுகவில் இருந்துவிட்டு சமீபத்தில் அமமுகவுக்கு மாறிய சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், தேர்தல் பிரச்சாரத்தில் குக்கர் சின்னத்துக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்காததை அடுத்து, அவர் சமீபத்தில் அமமுகவில் சேர்ந்தார். உடனடியாக அமமுகவின் சாத்தூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முறம்பு என்ற பகுதியில் மக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார். அப்போது ராஜவர்மன் பேசும்போது, "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ற தனி நபருக்காக முதல்வரும், துணை முதல்வரும் என்னை ஒதுக்கிவிட்டனர். ராஜேந்திர பாலாஜி தான் அதிமுகவா? ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ராஜேந்திர பாலாஜிக்கு என்ன வித்தை தெரியுமோ, அதைவிட எனக்கு 100 மடங்கு வித்தை தெரியும். இத்தொகுதியில் வெற்றிபெற்று டி.டி.வி.தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன். உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளிக்க வேண்டும்" என்று பேசினார்.
அதிமுகவில் இருந்த பழையநினைவில் ராஜவர்மன் இவ்வாறுபேசியதைக் கேட்டு அதிர்ந்துபோனஅருகிலிருந்த அமமுகவினர் உடனடியாக தவறை சுட்டிக்காட்டினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ராஜவர்மன், "குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்" எனக் கேட்டு பேச்சை முடித்துக்கொண்டார்.