Regional02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாட்களில் - பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.38.29 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனை களில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.38 லட்சத்து 29 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதால், கடந்த மாதம் 27-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள் ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல்பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனைச்சாவடிகள், முக்கிய இடங்கள், சாலைகளில் வாகனத்தணிக்கை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 27-ம் தேதி முதல் நேற்று(13-ம் தேதி) வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.38 லட்சத்து 29 ஆயிரத்து 240 ரொக்கம் மற்றும் ரூ.6 லட்சத்து 39 ஆயிரத்து 900 மதிப்பிலான 6.319 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 600 விடுவிக்கப்பட்டுள்ளது. பர்கூர் தொகுதியில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதில், ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஓசூரில் ரூ.15லட்சத்து 69 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டதில்ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 600 விடுவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரமும், வேப்பனப்பள்ளி தொகுதியில் ரூ.9 லட்சத்து 56 ஆயிரத்து 430, தளியில் ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 210 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை தொகுதியில் இதுவரைபணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப் படவில்லை.

SCROLL FOR NEXT