கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என வணிக நிறுவனம் ஒன்றில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். 
Regional03

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை - விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பொதுமுடக்கம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கரோனா விதிமுறை பின்பற்றாத 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பொதுமுடக்கம் நிலை ஏற்படலாம், என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி.கதிரவன் ஈரோடு வஉசி பூங்கா, காய்கறி மார்க்கெட் வணிக வளாகங்கள், மேட்டூர் சாலையில் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இதுபோல் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 வரை உள்ளது. எனவே, தொழிற்சாலை, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தொழிற்சாலை, நிறுவனங்களில் சானிடைசர் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் பொது முடக்கம் நிலைமை ஏற்படலாம், என்றார்.

SCROLL FOR NEXT