National

சிபிஐ இயக்குநர் நியமனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் :

செய்திப்பிரிவு

சிபிஐ இயக்குநர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்று கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிபிஐ இயக்குநராக (பொறுப்பு) பிரவீண் சின்ஹா தற்போது பதவி வகித்து வருகிறார். மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதன்படி, சிபிஐ இயக்குநர் பதவிக்கு அதிகாரியை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே, சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானாவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இந்நிலையில்தான் பிரவீண் சின்ஹா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சிபிஐ புதிய இயக்குநரை நியமிக்கவேண்டும் என்று காமன் காஸ் என்ற அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவானது நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

காமன் காஸ் என்ஜிஓ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிடும்போது, “சிபிஐ இயக்குநர் பதவிக்கு இடைக்கால இயக்குநராக பிரவீண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் விசாரணை அமைப்பான சிபிஐ-யின் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. எனவே சிபிஐ இயக்குநர் பதவியில் இருப்பவர் பணிக்காலம் முடிய 2 மாதங்கள் இருக்கும்போதே சிபிஐ இயக்குநர் தேர்வுக்குழு கூடி புதியவரை தேர்வு செய்ய உத்தரவிடவேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT