ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், இரு அமைச்சர்கள் தொகுதி உட்பட 4 தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடியாக மோதுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், ஈரோடு மேற்கு, கோபி, பவானி, அந்தியூர், பவானிசாகர், பெருந்துறை ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், மொடக்குறிச்சி தொகுதி பாஜகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், பெருந்துறை கொமதேகவிற்கும், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடும் கோபி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்டியிடும் பவானி மற்றும் அந்தியூர், ஈரோடு மேற்கு தொகுதிகளில் அதிமுக – திமுக நேரடியாக மோதுகின்றன. மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் மாநில துணைப்பொதுச்செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக வேட்பாளரை எதிர்த்து களம் காண்கிறார்.