தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடுபவர்கள், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், பர்கூர் தொகுதிக்கு, பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிருஷ்ணகிரி தொகுதிக்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஓசூர் தொகுதிக்கு ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், தளி தொகுதிக்கு தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
இதனால் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு உள்ளூர் போலீஸார், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று 6 தொகுதிகளில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
தருமபுரி மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கலின் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும், வேட்பு மனு தாக்கலுக்கு முதல் நாளான நேற்று எந்த வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்யவில்லை.