தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் கண்ணப்பன் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகள் சிலவற்றில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 50 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு தொலைக்காட்சித் திரையில் வை-பை வசதியுடன் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படுவதையும், கணினி ஆய்வகம், கூட்ட அரங்கில் அமைந்துள்ள ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
உலக அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற அப்பகுதியைச் சேர்ந்த மாணவி புவனேஸ்வரியை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மூலிகை, காய்கறி தோட்டங் களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 34 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் உள்ளிட்டவை அடங்கிய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.பின்னர் அவர் கூறும்போது, ‘ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பள்ளி வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி நலனுக்கும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்’ என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி (தருமபுரி), பொன்முடி (அரூர்), முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், அவ்வையார் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துகுமார், வெள்ளோலை பள்ளி தலைமை ஆசிரியர் கேசவகுமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.