Regional03

புதுச்சேரி அருகே - 3,200 லிட்டர் சாராயம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

புதுச்சேரி அடுத்த திருபுவனை ஆண்டியார்பளையம் பகுதியில் மாங்குப்பம் பாதையில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக திருபுவனை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ராஜா (34) என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடோனில், வேன் ஒன்று இருந்தது. அதனை சோதனை செய்தபோது, அதில் ஒரு பகுதியை அடைத்து, ரகசிய இடம் அமைத்து சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன் மொத்த இருப்பு 3,200 லிட்டர் என கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், மேலும் ராஜாவின் உறவினர்கள் வீட்டிலும் சோதனையிட்டனர். அங்கும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், 800 காலி கேன்கள், சாராயத்தை பரிமாற்றம் செய்வதற்கான குழாய்கள், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அங்கு வேலை பார்த்த விழுப்புரம் வட்டம் காரை புதுத்தெருவைச் சேர்ந்த குபேந்திரன், பண்ருட்டி செம்மேடு பகுதியை சேர்ந்த தமிழரசன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT