அதிமுக, திமுக அண்ணா வழியில் இருந்து விலகி பிரதமர் மோடி வழியில் செல்கின்றன என்று அமமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அசாவுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில், வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, மதுபான ஆலைகளுக்கு அனுமதிகிடையாது, மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும், 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இக்கூட்டத்தில், பங்கேற்று கூட்டணி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி பேசியதாவது:
தேசிய கட்சியான எங்களை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வரும் போது கூட்டணியில் இருந்துகாயிதே மில்லத்தின் கனவுகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றன.திமுகவில் சிறுபான்மையின தலைவர்களுக்கே மதிப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, அந்த கூட்டணி வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார்.
கூட்டத்தில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: மக்கள் நினைத்தால் நம்முடைய கூட்டணி முதல் அணியாக வரும். நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தாண்டி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.