சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் அவ்வழியாக வந்த மாணவர்கள் காதில் அணிந்திருந்த கடுக்கனை கழற்ற வைத்து, அறிவுரை கூறி அனுப்பினர்.
மானாமதுரை புறவழிச் சாலையில் துணை வட்டாட்சியர் சேகர் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் காதில் கடுக்கன், கையில் வளையம், கழுத்தில் எவர்சில்வர் சங்கிலி, பாசி போன்றவற்றை அணிந்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அவர்கள் பள்ளிக்குச் சென்று வருவதாகக் கூறினர். இதையடுத்து மாணவர்களிடம் போலீஸார் ‘படிக்கும் வயதில் இது போன்று தோடு, சங்கிலி அணிந்து செல்வது தவறு. நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் இதுபோன்று அணிந்து வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பர். படிப்பைத் தவிர வேறு எந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வரக் கூடாது,’ என்று அறிவுரை கூறினர்.
பிறகு அவர்கள் அணிந்திருந்த கடுக்கன், வளையல், சங்கிலியை கழற்ற வைத்து அனுப்பினர்.