சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக 10 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதிமுக ஏற்கெனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவும் த னது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஓமலூர் தொகுதியைத் தவிர மற்ற 10 தொகுதிகளிலும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
இந்த 10 தொகுதிகளில், சேலம் வடக்கில் தற்போதைய எம்எல்ஏ., ராஜேந்திரன், கெங்கவல்லி (தனி) தொகுதியில் ரேகா பிரியதர்ஷினி, ஏற்காடு (தனி) தொகுதியில் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் மீண்டும் அதே தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஆத்தூர் (தனி) ஆகிய 7 தொகுதிகளிலும் புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். ஓமலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி் போட்டியிட உள்ளது. சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிமுக- திமுக இடையே நேரடி போட்டி யும், மேட்டூர், சேலம் வடக்கு தொகுதி என 2 தொகுதிகளில் திமுக-பாமக இடையில் போட்டியும் ஏற்பட்டுள்ளது.