Regional01

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன் னிட்டு கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க சேலம் மாநகர மற்றும் மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மலைக்கிராமங்களிலும், புறநகர் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கக் கூடும் என்பதால், காவல் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, கருமந்துறை பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் வீரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனை குறித்து கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடவுள்ளனர். அதேபோல, மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான தனிப்படையினர் கள்ளச்சாராய விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட எல்லைகளை ஒட்டி உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி, கடத்தி வந்து விற்பனை செய்யக் கூடும் என்பதால், எல்லையோர மலைப்பகுதிகளில் காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர். அதேபோல, சேலம் மாநகர பகுதிகளுக்கும் புற நகர் பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரலாம் என்பதால், மாநகர போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையும், மதுவிலக்கு அமலாக்க போலீஸாரும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT