கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தை தற்போது பொதுமக்கள் பயன்படுத்தவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தைப் பயன்படுத்த வருபவர்கள் உரிய நீச்சல் உடையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீச்சல் குளத்தை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நீச்சல் குளம் வளாகத்தில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருந்தல் வேண்டும்.
10 வயதுக்குட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது. கைகள் அழுக்காக இல்லாத போதும் கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தல் வேண்டும். ஆல்கஹால் சானிடைசர்களை சாத்தியமான இடங்களில் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.