Regional03

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் - 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் : ராணிப்பேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாளச் சீட்டு (பூத் சிலிப்) தனி அடையாள ஆவணமாக கருதப் படாது. இதை வைத்து ஆவணமாக கொண்டு வாக்களிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்தி வாக்காளிக்க ஊக்குவிக்கும் விதமாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டபணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், பான்கார்டு, தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை, தேசியஊரக வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அட்டை, தொழிலாளர் நலத் துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை, புகைப் படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையை காண்பித்து வாக்களிக் கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT