பள்ளி மாணவர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்களுக்கு தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். இதுதொடர்பாக ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, பள்ளி வாகனங்களில் வரும்போது முகக் கவசம் அணிவது அவசியம். வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுபோல, உணவு சாப்பிடும்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் அவ்வப்போது கிருமிநாசினி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும். இடைவேளையின்போது மாணவர்கள் வெளியில் சுற்றுவதையும், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் மாணவர்களுக்கோ, ஆசிரியர் களுக்கோ சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின், தயக்கமின்றி அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆதார் அட்டை அல்லது அடையாள அட்டையுடன் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.