டீசல் விலை உயர்வு காரணமாக, மூலப்பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளதால், செங்கல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, பாலப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் செங்கல் சூளைகள் அதிக அளவில் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக இத்தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வீரபாண்டி யில் செங்கல் சூளை நடத்தி வரும் ஜெயராமன், பழனிசாமி ஆகியோர் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கடந்த இரு மாதங்களாக செங்கல் உற்பத்தியை மீண்டும் தொடங்கினோம்.
ஆனால், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால், சூளைக்கான மண் விலை யூனிட் ரூ.600-ல் இருந்து ரூ.1,400 ஆக அதிகரித்துள்ளது. ஒரு டன் விறகு ரூ.2,300-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.
மேலும், செங்கல் அறுப்பவர்களுக்கான கூலியும் அதிகரித்துவிட்டது. இதனி டையே, தேர்தல் தொடங்கியதால், செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு பிரச்சினைகளால் செங்கல் உற்பத்திக்கான செலவு பல மடங்கு அதிகரித்து, ஒரு கல்லுக்கு 30 பைசா வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால், டீசல் விலை உயர்வினால் லாரி வாடகை உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், கட்டுமானத் தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் செங்கல் தேவை குறைந்துள்ளது.
ஒரு சூளையில் மாதம் 70 ஆயிரம் செங்கல் வரை விற்பனையான நிலையில், தற்போது 40 ஆயிரம் கூட விற்பனையாவதில்லை. செங்கல் உற்பத்தி தொழிலை பாதுகாக்க அரசின் நடவடிக்கை அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.