கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். 
Regional02

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் - ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி அகிலா. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், போச்சம்பள்ளி அருகே ஒலைப்பட்டி கிராமத்தில் இருந்தது. இதனை சென்னை டாசிட் நிறுவனம் கையகப்படுத்தியது. இதற்கான இழப்பீடு வழங்கக் கோரி, அகிலா கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த, ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம், அகிலாவுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அகிலா மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடு வழங்காத காரணத்தால், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள், அலுவலகத்தில் இருந்த மேஜை, கணினி, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வெளியே கொண்டு வந்தனர். மேலும், வட்டாட்சியரின் வாகனத்தில் ஜப்தி நடவடிக்கை தொடர்பான நோட்டீஸ் ஒட்டினர்.

ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் (12-ம் தேதி) வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். ஜப்தி நடவடிக்கையால் அப்பணிகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, தேர்தலுக்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் வட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT