Regional01

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் :

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கீழ்பவானி பாசனத்துக்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது.

கடந்த ஒரு மாதமாக அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 236 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், நேற்று அதிகாலை நீர் வரத்து 3446 கனஅடியாக அதிகரித்தது. காலை 9 மணியளவில் நீர் வரத்து 4389 கன அடியாக அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.51 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 2447 கன அடியாகவும் இருந்தது.

அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக் காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் பாசன காலம் முடிந்ததையடுத்து தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT