Regional01

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை :

செய்திப்பிரிவு

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் இந்த ஆண்டு பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்துவது குறித்து கோபி கோட்டாட்சியர் பழனிதேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை, கோயில் பரம்பரை அறங்காவலர் குழு, காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ’மார்ச் 30-ம் தேதியன்று நடக்கும் குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை. இவ்விழாவுக்காக சிறப்பு பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. கடைகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.

வெளியில் இருந்து அன்னதானம் செய்ய அனுமதி இல்லை, என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT