தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியில் நேற்று மாலையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் கூட்டுறவுத் துறை அதிகாரி வீரபாகு தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
அந்த காரில் இருந்த நபரிடம் ரூ.67.96 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மாவட்டத்தில் இதுவரை 18 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.85 லட்சத்து 45 ஆயிரத்து 10 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 77 ஆயிரம் பறிமுதல்
திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மானூர் அருகே கீழபிள்ளையார்குளத்தில் கூட்டுறவு சார்பதிவாளர் முத்துராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தனர். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அங்கராஜ் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பூத் சிலிப்புகள் மற்றும் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.