அதிமுகவுடன் தமாகாவுக்கு தொகுதி உடன்பாடு ஏற்படாததால் தமாகா அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று (மார்ச் 11) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போதே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், நான்காவது கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் தங்கமணியுடன் நேற்று நடைபெற்றது. இருப்பினும், தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. தமாகா வால்பாறை, காங்கேயம், ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளை ஒதுக்கும்படி கோரியிருந்தது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் வால்பாறை, காங்கேயம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாகவும், அதனை தமாகா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் தமாகா அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.