தேர்தல் விளம்பரங்களை அனுமதி எண்ணுடன் வெளியிட வேண்டும் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர செலவினங்களை கண்காணித்து கணக்கிட்டு தேர்தல் செலவு கணக்கீட்டாளருக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆட்சியர் அலுவலக அறை எண்.128-ல் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இக்குழு செயல்பட்டு வருகிறது.
மேலும், தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளை கண்காணிக்க தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான செய்திகளோ அல்லது அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவரை சார்ந்தோர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், எப்.எம்,ரேடியோக்களில் விளம்பரம் செய்ய விரும்புவோர் அந்த விளம்பரத்தை வெளியிடும் முன்னர் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று அந்த அனுமதி எண்ணுடன் விளம்பரம் வெளியிட வேண்டும்.
விளம்பரத்தின் இரண்டு நகல்களையும், ஒளி, ஒலி விளம்பரமாக இருந்தால் பென்டிரைவ் அல்லது சிடியில் பதிவு செய்து 2 செட்களையும் இணைத்து, விளம்பரம் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டதற்கான செலவினத் தொகைக்கான பட்டியல், விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சி, நாளிதழ்களின் விளம்பர கட்டண பட்டியல் உள்ளிட்டவைகளை உரிய படிவத்துடன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் வழங்கி அனுமதி பெற்று விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.