திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின்கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளின் மண்டல அலுவலர்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்களை கொண்ட வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி முக்கிய தகவல்களை பதிவிட வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்காக திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின்கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகள் 349 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் மண்டலஅலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடத்தை விதிகள்
தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை தொடர்புடைய மண்டலத்துக்கு, மண்டல அலுவலரே முழு பொறுப்பாளராக செயல்படவேண்டும். வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்.
மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோரை கொண்ட வாட்ஸ்-அப்குழு ஒன்று உருவாக்கி முக்கிய தகவல்களை பதிவிட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களின் வரிசை எண்ணை கவனமாக சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளில், வாக்குப்பதிவு நடைமுறைகளை கண்காணிக்கும் வகையில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று, வாக்குப் பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முறையாக செயல்படுகிறதா என்பதை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நடைமுறைகளை கண்காணிக்கும் வகையில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.