வேட்புமனுக்கள் பெறும் போது, அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள வேட்புமனுதாக்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
25 வயது பூர்த்தியடைந்த வாக்காளர் எவரும் தேர்தலில் போட்டியிடலாம். தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதி களில் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு பெறும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லை வரை தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு வேட்பாளருக்கு 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு பெறும் அறைக்குள் வேட்பாளருடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் போது, வாழ்த்து முழக்கங்கள் எழுப்பவோ, கொடி களை பயன்படுத்தவோ கூடாது. வேட்பாளர், அவருடன் வருபவர் தவறாமல் முகக் கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும்.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து தேர்தல் செலவின கணக்குகளை பராமரிக்க வேண்டும். இதற்காக வேட்பாளரிடம் தினசரி தேர்தல் செலவினங்களுக்கான பதிவேட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும் தேர்தல் விதிகள் தொடர்பான பிரிவு 127-ஏ விவரங்களை வழங்கி ஒப்புதல் பெற வேண்டும். எனவே, தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சிறப்பான முறையில் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து செயல்படுத்தவேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (வேட்புமனு) பவநந்தி, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.