பொது முடக்கம் காரணமாக ஓராண்டுக்குப் பிறகு திருச் செந்தூரில் தங்கத்தேர் கிரி வீதி உலா நேற்று தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர ஆண்டு முழுவதும் மாலை வேளையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரிவீதி உலா வருவது வழக்கம். இதற்கான கட்டணம் ரூ. 2,500. நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் முன்பதிவு செய்து தங்கள் குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்வர்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 20-ம் தேதி முதல் இக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1 -ம் தேதிமுதல் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால், தங்கத்தேர் கிரிவீதி உலா நடைபெறாமல் இருந்தது. தற்போது, கோயிலில் அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. எனவே, தங்கத் தேர் உலா நடைபெற அனுமதிக்க வேண்டி திருக்கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரினர். தற்போது, ஓராண்டுக்குப் பிறகு நேற்று (மார்ச் 10) முதல் திருக்கோயிலில் தங்க தேர் கிரிவீதி உலா தொடங்கியது.