கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தபால் முறையில் வாக்களிக்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 12டி படிவம் வழங்கி உரிய சான்றிதழ்களை பெற்று தபால் வாக்குகள் அளிக்க வேண்டும்.
தபால் வாக்களிக்க கட்டாயப்படுத்தக் கூடாது. பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி வாக்குச் சீட்டு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்தளங்கள், உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர், கழிவறை, தடையில்லாத சுத்தமான பாதை, வாக்குச்சாவடிகள் தரைத்தளத்தில் இருப்பதையும், வாக்குப் பதிவு மையங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக மேசைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்தல் வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 13,723 மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி 100 சதவீதம் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், தேர்தல் வட்டாட்சியர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.