Regional01

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் - நீச்சல் குளத்தில் போட்டிகள் நடத்த கட்டுப்பாடுடன் அனுமதி :

செய்திப்பிரிவு

கடலூர் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் போட்டிகள் நடத்த நடைமுறை விதிமுறைகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர்விளையாட்டரங்கம் நீச்சல் குளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் மற்றும் போட்டிகள் நடத்துவதற்கும் நடைமுறை விதிமுறைகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் படி கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப் படுவார்கள். நீச்சல் குள வளாகத்தில் சமூக இடைவெளியுடன், கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், நீச்சல் குளத்தில் உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.

அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

சளி, காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் நீச்சல் குளத்திற்குள் நுழைய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேல் உள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் நோயாளிகள் நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 74017 03495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT