ஈரோடு மாவட்டத்தில் 80 வயதைக் கடந்த 50 ஆயிரம் முதியோர் மற்றும் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், போலீஸார் என 16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர் உட்பட 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த 20 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேரும், மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 498 பேர் என மொத்தம் 64 ஆயிரத்து 560 பேர் உள்ளனர். இவர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்துவதற்கு ஏதுவாக 12-டி படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக நேற்று வரை 22 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 7 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.