தூத்துக்குடி அருகேயுள்ள டி.சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணி மைக்கிள் பாரத், ஜான் சாமுவேல், அந்தோணி அருள்ராஜ், கனகராஜ், அபிஷேக் ராஜ், வெள்ளப்பட்டியை சேர்ந்த அந்தோணி ராபின், ராமநாதபுரம் நரிப்பையூரை சேர்ந்த ஜெபமாலை ராஜ், இருதயராஜ் ஆகிய 8 பேரும்தருவைகுளத்தை சேர்ந்த ஒரு விசைப்படகில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 8 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களையும், படகையும் மீட்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் கனிமொழி எம்.பியிடமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜிடமும் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து எம்.பி.யும், ஆட்சியரும்மாநில மற்றும் மத்திய அரசின் கவனத் துக்கு கொண்டு சென்றனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் 8 மீனவர்களையும், படகையும் மாலத்தீவு அரசு நேற்று விடுவித்தது.
8 மீனவர்களும் தங்களது விசைப்படகில் குல்குதுபுஷி தீவு பகுதியில் இருந்து நேற்று மதியம் 12.05 மணியளவில் புறப்பட்டனர். அவர்களுடன் இந்திய எல்லை வரை மாலத்தீவு கடலோர காவல் படையினர் வருகின்றனர்.
8 மீனவர்களும் வரும் 14-ம் தேதி தருவைக்குளம் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.