Regional01

விதிமீறலுக்கு அபராதம் செலுத்தாத 1,300 பேரின் வாகனங்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சேலத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு, அபராதத் தொகையை செலுத்தாத 1,300 பேரின் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் பைன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் மோசடி நடந்ததை தொடர்ந்து ஆன் லைன் மூலம் அபராதம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டாக அதிவேகமாக வாகனங்களில் சென்றவர்கள், தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ஆன்-லைன் மூலமாக அபராதத் தொகை செலுத்தும் வகையில் காவல்துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் கடந்த ஒரு ஆண்டில் 80 ஆயிரம் பேர் அபராதம் செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதனையடுத்து, அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் மாநகரம் முழுவதும் அபராதம் செலுத்தாத 1,300 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அபராதத் தொகையை செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல போலீஸார் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீஸார் போக்குவரத்து விதிமீறி இயங்கும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT