சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திடீர் வாகனத் தணிக்கை மற்றும் கிடங்குகள் தணிக்கை மேற்கொள்ள சேலம் ஜிஎஸ்டி ஆணையரகம் சார்பில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வாக்காளர் களுக்கு சட்ட விரோதமாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் ஜிஎஸ்டி ஆணையரக ஆணையர் மீனலோசனி உத்தரவுப்படி சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோதமாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 7 பறக்கும் படையும், ஈரோடு மாவட்டத்துக்கு 4 பறக்கும் படையும், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கு 4 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.