சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த வேளாண் துறை தற்காலிக பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவர் தலைவாசல் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில், தற்காலிக பணி அடிப்படையில் உதவி தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்காடு (தனி) தொகுதியில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு கொடுத்தது தொடர்பான வீடியோ பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இவர் திமுகவில் விருப்ப மனு கொடுத்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அரசுப் பணியில் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக அவரை மாவட்ட ஆட்சியர் ராமன் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.