தேர்தல் 2021

முதல்வருடன் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு

கி.ஜெயப்பிரகாஷ்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தேமுதிக தரப்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டன. பின்னர், 23 தொகுதிகள் வரையாவது ஒதுக்க வேண்டுமென தேமுதிக வலியுறுத்தியது. எனினும், 15 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று இரவு நேரில் சந்தித்து பேசினர்.

இன்று தொகுதி பங்கீடு நிறைவு

இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை தேமுதிக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். இதேபோன்று, பாமக நிர்வாகிகளும் நேற்று இரவு முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச்சு நடத்தினர். இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT